சமூகசேவை செய்வதில் தான் எனக்கு முழு ஈடுபாடு - சமூகசேவகி சந்தியா தணிகைவேல்!!
12 January 2025
பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களது தொழிற்பயிற்சிக்கான வகுப்புகள் எடுத்தல், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஏதேனும் தேவையா உடனே களத்தில் இறங்கும் குணம், கல்விக்கான உதவியா? மாற்று திறனாளிகளுக்கான உதவியா? தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் ஓடிச்சென்று உதவ வேண்டுமா? உடனே ஒடிச் சென்று உதவி செய்கிறார் சமூகசேவகி சந்தியா தணிகைவேல். ஆதரவற்ற மற்றும் ஏழை பெண்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களுக்கான விற்பனை மார்க்கெட்டிங் என பல்வேறு உதவிகள் செய்து அவர்களது வாழ்வில் பெரும் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கம் என்கிறார் சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சந்தியா தணிகைவேல். இவை அனைத்தும் யாரிடமும் எந்த உதவியும் பெறாமல் தானே முன் நின்று சொந்த முயற்சியில் தன் கணவர் தணிகைவேலோடு சேர்ந்து செய்கிறார் என்பது இவரது சிறப்பம்சங்கள். சமூக சேவை செய்வதே வாழ்வின் லட்சியமாக வாழ்ந்து வரும் சந்தியா தணிகை வேல் தனது சேவைகள் மற்றும் திட்டங்கள் அதற்கான செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
உங்களை பற்றி சொல்லுங்கள்..
எங்களுக்கு இயல்பிலேயே சமூக சேவைக்கான ஆர்வம் அதிகமாக இருந்தது. நான் படித்தது பத்தாம் வகுப்பு மட்டுமே. எனது திருமணத்திற்கு பிறகு கணவர் தணிகைவேல் அவர்களுடன் சேர்ந்து பெண்களுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளை நடத்தும் இன்ஸ்டிடியூட் ஒன்றை வைத்திருந்தேன். அதில் படித்த ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்கள் சிலர் இலவச வகுப்புகள் நடத்த இயலுமா என கேட்டார்கள். அப்போது பெரும் சிரமத்திற்கிடையேயும் ஆதரவற்ற பெண்களின் வாழ்வில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படுத்தி விட வேண்டும் என்கிற பெரும் ஆசை எனக்கும் எனது கணவருக்கும் இருந்தது. அதன் விளைவாக பெரும் திட்டமிடலுடன் ஏழை பெண்களுக்காக இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளை நடத்தினேன். இதன் மூலம் பல பெண்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்தது. தற்போது வரை நிறைய பெண்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு வகுப்புகளை நடத்துவதோடு நின்று விடுவதில்லை. பொருட்களை தயாரிக்க அதனை சந்தைப்படுத்துதல் போன்ற பலவற்றிற்கும் உதவி வருகிறோம். இன்று பல பெண்கள் கணிசமான வருமானத்தை பெற இந்த பயிற்சி வகுப்புகள் பெரும் பக்கபலமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
ட்ரீம்ஸ் அறக்கட்டளையின் இதர உதவிகள் குறித்து சொல்லுங்கள்...
இதனை தவிர கல்வி உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, டியூசன் பயிற்சி வகுப்புகள் என பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வருகிறோம். நாங்கள் எங்களது அறக்கட்டளை மூலம் திருநின்றவூர் முதல் திருத்தணி வரை ஏறக்குறைய 120 கிராமங்களில் எங்களது பயிற்சிகளை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் அறுபது பேருக்கு இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறோம். இந்த பெண்களுக்கு தையற்கலை, அழகுக்கலை, ஆரி ஒர்க் ப்ளவுஸ்கள் தைப்பது என பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். அதன் மூலம் பயன்பெற்ற பெண்கள் ஏராளமானோர் தற்போது மிகப்பெரிய தொழில் முனைவோராகி நல்ல நிலையில் இருக்கிறார்கள். கிராப்புற ஏழை பெண்களுக்கு இலவச கறவை மாடு, விவசாயிகளுக்கு தேவையான உழவு மாடுகள் வழங்கி வருகிறோம்.
ட்ரீம்ஸ் அறக்கட்டளையின் நோக்கங்கள் என்ன?
எங்களது அறக்கட்டளையின் முக்கிய நோக்கமே ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தேவைப்படும் தொழிற்கல்வி பயிற்சிகள் அளித்து அவர்கள் தொழிலை தொடங்கி தொடர்ந்து நடத்துவதற்கான அனைத்து உதவிகள் செய்து அவர்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்துவதோடு வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும். மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியறிவு குறித்த தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்யவேண்டும் என்பதே எங்களது சீரிய நோக்கம் . அதற்காகவே கடந்த 13 வருடங்களாக நானும் எனது கணவரும் உழைத்து வருகிறோம்..
கல்வி உதவி பணிகள் குறித்து...
ஏழை மற்றும் தலித் மாணவ மாணவியர்களுக்கு தேவைப்படும் கல்விக்கான பல உதவிகளை பெற்றும் தருகிறோம். அந்த மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்ற இலவச டியூசன் சென்டர்கள் அமைத்து சொல்லி தருகிறோம்.. ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை நாங்களே எங்களது அறக்கட்டளையின் மூலமாக செலுத்தி படிக்க வைக்கிறோம். டீரிம்ஸ் என்கிற அமைப்பின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி குறித்தும் அதற்கான உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருவதோடு, மாணவ மாணவியர்கள், பல்வேறு ஆதரவற்றோர்கள் என பலரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். கல்லூரி கட்டணம் செலுத்த இயலாத ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை வழங்கி உதவி வருவதோடு, இலவச வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இலவச சட்ட உதவிகள் குறித்து..
எங்களது ட்ரீம்ஸ் அறக்கட்டளை மூலமாக இலவச சட்ட ஆலோசனை மையம், இலவச கல்வி மையம், இலவச தொழிற் பயிற்சி மையம், ஸ்போர்ட்ஸ் அகடமி, இலவச மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறோம். ஏழை கிராமத்து மக்களுக்கு சட்டம் குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இதனை செயல் படுத்தி வருகிறோம். ஆதரவற்ற ஏழை பெண்கள் தொழில் தொடங்க வங்கிகளில் கடனுதவி பெறவும் உதவுகிறோம் . நாங்களே இலவசமாக தையல் இயந்திரங்களையும் வழங்கி வருகிறோம்.
அன்னதான திட்டம் குறித்து..
தனது கணவருடன் இணைந்து 2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்து வருகிறேன். அதன் பிறகு 2019 ம் ஆண்டு முதல் முழு நேர சேவையில் ஈடுபட்டு வருகிறேன். கொரானா பாதிக்கப்பட்ட நேரத்தில் அந்த காலகட்டத்தில் தினமும் 500 பேருக்கு சமைத்து மினி லாரியில் கிராமம் கிரமமாக சென்று உணவு எடுத்து சென்று வினியோகம் செய்தோம். ஏழை மக்களுக்கு தேவையான உணவு மளிகை பொருட்களோடு அத்தியாவசிய தேவைகளையும் கிராமம் கிராமமாக சென்று வினியோகம் செய்தோம்.
ட்ரீம்ஸ் அறக்கட்டளையின் பணிகள் குறித்து...
மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் அளித்து வருகிறோம்.
இருளர் மற்றும் பழங்குடியினருக்கு அத்தியாவசிய பொருட்கள், மாதத்திர மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 2 கிராமத்திற்கு வழங்கி வருகிறோம். ஆதரவற்ற முதியோருக்கும் அத்தியாவசிய பொருட்கள், இலவச மருத்துவ சிகிச்சை உதவி ,காது கேளாதோருக்கான மிஷின், கண்ணாடி போன்றவற்றை வழங்குகிறோம். ஏழை பெண்களுக்கு கப் சாம்பிராணி மெழுகுவர்த்தி , ரெடிமேட் பிளவுஸ், நைட்டி , உள்பாவாடைகள் தயாரிக்க உதவிகள் செய்து வருகிறோம். மேலும் அதற்கான விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் விஷயங்களை நிறையவே செய்து தருகிறோம். இலவச டியூசன் வகுப்புகளை எடுக்கிறோம்.
உங்களுக்கு கிடைத்த விருதுகள் மற்றும் பாராட்டுகள் கௌரவங்கள் குறித்து சொல்லுங்கள்...
எங்களது சமூகம் சார்ந்த சிறந்த முன்னெடுப்புகள் மற்றும் சிறந்த பணிகளுக்காக நிறைய அங்கீகாரத்துடன் பாராட்டுதல்களும் ஏராளமான கௌரவங்களோடு விருதுகளும் கிடைத்துள்ளது.
கொற்றவை நியூஸ் மாத இதழ் எனக்கு " புரட்சி நாயகி விருது " வழங்கி மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
மதர் தெரேசா விருதினை
உலகத் தமிழ் பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்தது. மேலும் World Charity Welfare Foundation வழங்கிய
International Social Honorable Award கிடைத்தது எனக்கு பெரும் கௌரமான ஒன்று.
திராவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மதுரை முத்தமிழ் நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சர்வதேச முத்தமிழ் விருதுகள் பெற்றுள்ளேன்
சேவை செம்மல் விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. அறம் விருதுகள் மற்றும் ஸ்டார் ஐகான் விருதுகள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பாராடட்டுதல்களையும் எனது சமூக சேவைகளுக்காக பெற்றுள்ளேன் என்பதெல்லாம் எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாவே நினைக்கிறேன் . இன்னும் கல்விக்காக மற்றும் நமது பெண் சமூதாயத்திற்கான நிறைய நலத் திட்டங்கள் உதவிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதற்காவே தொடர்ந்து உழைத்து வருகிறோம்.மேலும் நிறைய பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதே எனது வாழ்வின் பெரும் லட்சியம் என்கிறார் சந்தியா தணிகைவேல்.
நான் இத்துறைகளில் வெற்றியடைய எனது கணவரும் எனது குடும்பம் முழுவதும் என்னை உற்சாகப்படுத்தி உறுதுணையாக இருப்பதே முக்கியமான காரணம். என் வெற்றிக்கு பின்னாலும் எனது குடும்பம் தான் உள்ளது என்கிறார் சந்தியா.
தற்போது வரை இவரது தொடர்ந்த சமூக சேவைகளுக்காக மேலும் பல விருதுகளும் பாராட்டுதல் களும் கிடைத்து வருவதே இவரது சீரிய பணிக்கு பெருமைமிகு சான்றாக அமைந்துள்ளது. மற்றவர்களின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என வாழ்ந்து வரும் சந்தியா மற்றும் தணிகைவேல் அவர்களை வாழ்த்தி விடைப்பெற்றோம்.